தாலிபான்களிடமிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற 5 வயது ஆப்கான் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
தாலிபான்களிடமிருந்து தப்பி போலந்து நாட்டுக்கு சென்ற 5 வயது ஆப்கான் சிறுவன் விஷ காளான்களை சாப்பிட்டதால் பரிதாபமாக ஊயிரிழந்தார்.
அவரது 6 வயது சகோதரனும் உயிருக்கு போராடிவருவதாக போலந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து, விமானம் மூலம் இந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் குடும்பத்தோடு போலந்து நாட்டிற்கு வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் வார்சாவுக்கு (Warsaw) அருகிலுள்ள போட்கோவா லெஸ்னா (Podkowa Lesna) நகரில் புலம்பெயர்ந்தோருக்கான தனிமைப்படுத்தலில் இருந்தனர்.
இந்த நிலையில், மறுநாள் இருவரும் தங்கள் சகோதரியுடன் அங்கிருந்த காளான்களை சாப்பிட்டனர். அடுத்த நாள் மூவருக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களின் சகோதரி பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது 6 வயது சகோதரர் மரணத்துடன் போராடிவருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அகதிகளுக்கான முகாமில் போதுமான அளவு உணவளிக்காததால் குழந்தைகள் காளான்களை சாப்பிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதனை வெளிநாட்டினருக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாகூப் டட்ஜியாக் (Jakub Dudziak) மறுத்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் பேசிய அவர், முகாமில் "பால் பொருட்கள், இறைச்சி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பானங்கள் என ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.
இந்த துரதிருஷ்டவசமான விபத்து குறித்து பேசிய டட்ஜியாக், 'வெளிநாட்டினருக்கான மையங்களின் ஊழியர்கள் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு தெரியாத தோற்றம் கொண்ட பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று உணர்த்துவார்கள்" என்று கூறினார்.