கடைசி துளி இரத்தம்... தாலிபான்களுக்கு சூளுரைத்த பிரித்தானியாவால் பயிற்சி பெற்ற ஆப்கான் கமாண்டோக்கள்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பிரித்தானிய இராணுவத்தால் பயிற்சி பெற்ற ஆப்கான் கமாண்டோக்கள் மீண்டும் ஒருங்கிணைகிறார்கள் என்ற நம்பிக்கை அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் அதிரடியான திட்டத்தால் அதிக இரத்தப்பழி காணாமல் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானின் பெரும்பாலான மாகாணங்களை ஒன்றின் பின் ஒன்றாக கைப்பற்றிய பின்னர், இறுதியில் தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் ஜனாதிபதி இல்லம், பாராளுமன்ற வளாகம் என ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றினர்.
தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து அங்குள்ள மக்கள் கூட்ட,ம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகள் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவியும் வருகின்றனர்.
ஆப்கானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்களுக்கு சரணடைந்துள்ள நிலையில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு கமாண்டோக்கள் மட்டும் தாலிபான்களுக்கு சூளுரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
ஆப்கானிஸ்தானின் 34 பிராந்தியங்களில் தலைநகர் காபூலில் இருந்து 80 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டுமே தாலிபான்களுக்கு இதுவரை சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது.
பிரித்தானிய ராணுவத்தால் பயிற்சிபெற்ற இங்குள்ள கமாண்டோக்கள் தங்கள் நாட்டு ராணுவத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தாலிபான்களுக்கு எதிராக போராட துணிச்சல் கொண்ட இராணுவ வீரர்கள் அல்லது போராளிகள் எவராக இருந்தாலும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு வரவேற்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே தமது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், நான் ஒருபோதும், எந்த சூழ்நிலையிலும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு தலைவணங்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தற்போது தங்களிடம் சிறந்தவர்களில் மிகவும் சிறந்தவர்களான ஆயிரம் கமாண்டோக்கள் இருப்பதாகவும், மேலும் பலர் தங்களுடன் இணைய காத்திருப்பதாகவும், உள்ளூர் மக்களின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாகவும் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தங்களின் கடைசி துளி இரத்தம் சிந்தும் மட்டும் தாலிபான்களுக்கு எதிராக போரிட தயாராக இருப்பதாகவும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.