பெண்களை தொடுவதற்கு தடை - ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி தவிக்கும் பெண்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்களை தொடுவதற்கு தடை உள்ளதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி இரவு 11;47 மணிக்கு, கிழக்கு ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20 நிமிடங்களில், அடுத்தடுத்த 2 நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இதில், தற்போது வரை 2,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,600 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், பெண்களை மீட்க மறுப்பதாக மீட்பு குழுவினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களை மீட்க மறுப்பு
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் மீது பல்வேறு அடக்குமுறை சட்டங்களை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களை, தந்தை, சகோதரர், கணவர், மகன் தவிர பிற ஆண்கள் தொட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை கடுமையாக பின்பற்றும் ஆண்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ள பெண்களை மீட்காமல், ஆண்கள் மற்றும் குழந்தைகளை மட்டும் மீட்டு செல்கின்றனர்.
அங்கு பெண் மீட்புக்குழுவினர் யாரும் இல்லை. குடும்பத்தினர் யாராவது வந்தால் மட்டுமே அந்த பெண்களை இடுபாடுகளில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.
இது குறித்து பேசிய குணார் பகுதியை சேர்ந்த பெண், "நாங்கள் இடுபாடுகளில் சிக்கி ரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையிலும், ஆண்கள் எங்களை மீட்க மறுத்து விட்டனர். கலாச்சாரம் தொடர்பான விதிக்கு ஆண்கள் பயப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வாகனம் ஓட்ட, உயர்கல்வி பெற, உடற்பயிற்சி கூடம் செல்ல, உணவகங்களில் ஆண்களுடன் சேர்ந்து உணவருந்த என பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கூட இந்த விதிகளை கடைப்பிடிப்பது உயிரிழப்பை அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |