எங்கள் மக்களை விட்டுவிடுங்கள்... அனுமதிக்க முடியாது: உலக நாடுகளுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் மக்களை நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூண்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களை நாட்டை விட்டு வெளியேற அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டாம் என்றார்.
மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் மக்கள், நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்திற்கு செல்வதை தாலிபான்கள் இனி அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையும் ஜபிஹுல்லா முஜாஹித் வைத்துள்ளார்.
மேலும், நாட்டை கட்டியெழுப்பும் மிகப்பெரிய பொறுப்பு தாலிபான்களுக்கு இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் சீரமைக்கப்படும் வரையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என தாலிபான் போராளிகள் பழகவில்லை எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக அமுலுக்கு கொண்டு வந்த பின்னர் பெண்கள் தங்கள் அன்றாட வேலைகளை தொடரலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வெளியேறும் காலக்கெடுவை ஆகஸ்ட் 31ம் திகதிக்கு பின்னர் நீட்டிக்க தாலிபான்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிய அவர், அந்த திகதியில் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்றார்.