தப்பியோடிய ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானி எங்கே இருக்கிறார்.. எவ்வளவு பணத்ததை அள்ளிச் சென்றார்? வெளியான தகவல்
நாட்டை விட்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் இருப்பிடம் குறித்து நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி காபூல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆகஸ்ட் 15ம் திகதி கைப்பற்றிய பின்னர் ஜனாதிபதி அஷ்ரப் கானி தலைமையிலான அரசு தானாகவே கலைந்தது.
அஷ்ரப் கானி தஜிகிஸ்தான் நாட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் தப்பிச் சென்றார் எனவும், அவர் ஆப்கனை விட்டு தப்பியோடிய போது கார்கள், ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிச் சென்றார் எனவும் தகவல்கள் வெளியானது.
ஹெலிகாப்டர் நிரம்பியதால் மீதமிருந்த பணத்தை அவர் ஓடுபாதையிலே விட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம், அஷ்ரப் கானி சென்ற விமானம் தஜிகிஸ்தானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் ஓமன் நாட்டிற்கு சென்றதாக தகவல்கள் பரவியது.
இதனிடையே, நாட்டை விட்டு தப்பியோடிய அஷ்ரப் கானி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் குடியேறியுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி காபூல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற போது அஷ்ரப் கானி 169 மில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துச்செல்ல முயன்றதாகவும், ஆனால் அவசரம் காரணமாக சில பணத்தை விமான நிலையத்திலே விட்டுச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.