ஆப்கானில் புதிய தாலிபான் அரசின் சுப்ரீம் தலைவர் யார்? வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், முல்லா ஹெபத்துல்லா அஹுன்ஸாடா புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த 15-ஆம் திகதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது.
இதையடுத்து அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையில் தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.
ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தாலிபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர். இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தாலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தாலிபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாலிபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தாலிபான்களின் தலைவரான முல்லா ஹெபத்துல்லா அஹுன்ஸாடா (Mullah Hebatullah Akhundzada) புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார் என்று தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் முப்தி அனாமுல்லா சமங்கனி (Mufti Inamullah Samangani) தகவல் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹெபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் இல்லை. அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என்று அவர் கூறினார்.
தாலிபான்கள் செப்டம்பர் 3-ஆம் திகதி, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.