ஆப்கான் பெண்கள் குரல் எழுப்ப தடை! தாலிபான் ஆட்சியில் அதிகரிக்கும் கட்டுப்பாடு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது அடுத்தடுத்த புதிய கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது.
புதிய கட்டுப்பாட்டு
தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்களின் சுதந்திரம் தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு உத்தரவில், பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முன்னிலையில் சத்தமாக தொழக் கூடாது என்று தடை விதித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர், தலிபானின் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
இந்த புதிய நடவடிக்கை பெண்களுக்கு எதிரான சூழ்நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நசுக்கப்படும் பெண்களின் குரல்
தலிபானின் நல்லொழுக்க அமைச்சர் காலித் ஹனஃபி, பெண்கள் பொது இடங்களில் குரல் எழுப்புவதை தடை செய்துள்ளார்.
இந்த தடை மத நடைமுறைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குர்ஆனை ஓதவோ அல்லது மற்ற பெண்கள் முன்னிலையில் சத்தமாக தொழவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தொழுகை அழைப்பு விடுக்க அனுமதிக்கப்படாத போது, நிச்சயமாக அவர்கள் பாடல்கள் அல்லது இசையைப் பாடுவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அமைச்சர் காலித் ஹனஃபி தெரிவித்துள்ளார்.
பெண்கள் தொழுகையின் போது கூட மௌனமாக இருக்க வேண்டும் என்றும், பெண்ணின் குரல் 'அவ்ரா’(awrah) என்று கருதப்படுவதால் மறைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |