காபூல் விமான நிலையத்தின் வெளிய இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! வெளியான அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் திகதி ஆப்கன் முழுவதும் தாலிபான்கள் வசம் சென்றது.
20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தன.
இந்நிலையில் தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையங்களில் கூடினர். முடிந்தால் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று மன்றாடினார். பெற்ற குழந்தைகளை பெற்ற தாய்மார்களே வேறு நபர்களிடம் கொடுத்து அனுப்பிய நிகழ்வுகளும் நடந்தேறின.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிய நிலையில், அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 30-ஆம் திகதி இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறின.
தாலிபான்கள் ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களின் பயணத்தை தடை செய்துள்ளனர். இதனால் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பல பெண்கள் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற தகுதியுடையவர்களாக ஆக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு அமீரக முகாம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பெண்களின் குடும்பங்களில் சிலர் தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி CNN தெரிவித்துள்ளது.
தப்பிக்க உதவுவதற்காக, தங்கள் பெண்களை திருமணம் செய்து கொள்வதற்காக அல்லது கணவர்களாக காட்டிக்கொள்வதற்காக, நாட்டைவிட்டு வெளியேற விருப்பமுள்ள சில ஆண்களுக்கு அந்த குடும்பங்கள் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் கடத்தலுக்கு உள்ளாகும் இதுபோன்ற நிகழ்வுகளை அடையாளம் காண அமெரிக்க தூதர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.