ஆப்கானிஸ்தான் பெயரை மாற்றிய தாலிபான்கள்! என்ன பெயர் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், நாட்டின் பெயரை மாற்றி இஸ்லாமிய அமீரகமாக மாற்றியுள்ளனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நாளில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும், யாரும் பயப்பட தேவையில்லை என்று அறிவித்தனர்.
ஆனால், அங்கு கடந்த சில நாட்களாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தாலிபான்கள் மீண்டும் தங்கள் கொடூர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனரோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
ஏனெனில் பொதுவெளியில் புர்கா அணியாமல் சென்ற பெண்ணை தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பெண்களை வேலைக்கு திரும்பும் படி வற்புறுத்தி வருகின்றனர்.
ஷரியத் சட்டம் நிச்சயமாக பின்பற்றப்படும் என்று அவர்கள் கூறியுள்ளதால், அங்கிருக்கும் மக்கள் எப்படியாவது அங்கிருந்து தப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 1919-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் ஆப்கானிஸ்தானில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தாலிபான்கள் பிரகடனம் செய்துள்ளதாக, செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான்கள் ஆட்சி செய்த போது, இந்த பெயர் தான் இருந்தது என்று நினைவுபடுத்திய அவர், புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வரும் தாலிபான் தலைவர்கள், புதிய அரசின் கட்டமைப்பு ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.