ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் பயந்து கண்ணீர் விட்டு கதறும் விளையாட்டு வீராங்கனைகள்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால், பெண்கள் கால்பந்து அணியின் உறுப்பினர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் விட்டுக் கதறிவருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானின் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கியவர் Khalida Popal. பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு வழியாக கால்பந்தை கருதிய Khalida, அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கியதைக் கண்டவர்.
பெண்களை மோசமாக நடத்தும் தாலிபான்களின் தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும்படி தன் சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியிருக்கிறார் Khalida.
அப்போது அவர் தாலிபான்கள் நமது எதிரிகள் என விமர்சித்ததை தேசிய தொலைக்காட்சியில் காட்டியிருக்கிறார்கள். ஆகவே, தாலிபான்களிடமிருந்து Khalidaவுக்கு கொலை மிரட்டல்கள் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே, 2011இல் விளையாடுவதை நிறுத்திய Khalida, தொடர்ந்து ஆப்கானிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் இயக்குநராக தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார். அத்துடன், 2016இல் நாட்டை விட்டு வெளியேறி டென்மார்க்கில் அடைக்கலம் கோரியிருக்கிறார் அவர்.
இப்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், நிலைமை மேலும் மோசமாக மாறிவிட்டது.
தினமும் Khalidaவை தொடர்பு கொள்ளும் ஆப்கன் கால்பந்து அணியின் வீராங்கனைகள், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி கதறி, கண்ணீர் விட்டு, தாங்கள் என்ன செய்வது என அவரிடம் ஆலோசனை கேட்டவண்ணம் உள்ளார்களாம்.
இப்போது அவர்களுக்கு ஒரே ஒரு ஆலோசனைதான் கூறுகிறார் Khalida. அது வீட்டை விட்டு எப்படியாவது ஓடிவிடுங்கள் என்பதுதானாம். ஏனென்றால், அவர்களுடைய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவர்கள் கால்பந்து வீராங்கனைகள் என்பது தெரியும்.
அத்துடன், சமூக ஊடகங்களிலிருக்கும் உங்கள் புகைப்படங்கள் முதல் அனைத்து வரலாற்றையும் அழித்துவிட்டு தப்பியோடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன் என்று கூறும் Khalida, அவர்கள் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்கிறார்.
அரசு தாலிபான்களிடம் சரணடைந்ததைப் பார்கும்போது வேதனையாக உள்ளது என்று கூறும் Khalida, பெண்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்கிறார்.