"உலகம் எங்களை நம்ப வேண்டும்" ஆப்கானில் முதல் செய்தி மாநாட்டை நடத்திய தாலிபான்!
தாலிபான்கள் "உலகம் எங்களை நம்ப வேண்டும்" என்று விரும்புவதாகவும் ஆப்கானிஸ்தானை பழிவாங்க விரும்பவில்லை என்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்திவிட்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ராணுவம் முதல் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால், என்ன ஆகுமோ? என மக்கள் மரண பீதியில் உள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிலிருந்து எப்படியாவது வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
மேலும், கவிழ்க்கப்பட்ட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சுதந்திரம் தற்போது பறிபோகுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்நிலையில், ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தாலிபான்கள் முதல் செய்தி மாநாட்டை இன்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையில் நடத்தினர்.
அப்போது பேசிய தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid), "உலகம் எங்களை நம்பவேண்டும் என்று விரும்புகிறோம், நாங்கள் ஆப்கானிஸ்தானை பழிவாங்க விரும்பவில்லை, பதிலாக அனைத்து ஆப்கன் மக்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குகிறோம்" என்று கூறினார்.
"தலைநகர் காபூலுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை உருவாக்குவதே தற்போது எங்கள் குழுவின் முக்கிய முன்னுரிமை" என்று கூறிய அவர், மேலும் நகர மக்கள் "அமைதியாக வாழ்வார்கள்" என்று உறுதியளித்தார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் சண்டையிட விரும்பவில்லை, எங்களின் முக்கிய முன்னுரிமை காபூலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது. இதை இந்த குழு அமெரிக்கா உட்பட உலகிற்கு உறுதியளிக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் மண் உலகின் எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்தப்படாது, என்றார்.
இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உப்பட்டு, எங்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும். பெண்கள் வேலை செய்யலாம், பள்ளிக்குச் செல்லலாம், பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் வேலை செய்யலாம் என்று கூறுயுள்ளார். மேலும் பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். உலகம் எங்களை நம்ப வேண்டும் என்று விரும்புகிறோம், அப்போது தான் நாங்கள் ஆப்கானிஸ்தான் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க முடியும் என்று கூறினார்.
தாலிபான்கள் "எந்த உள்நாட்டு அல்லது வெளிப்புற எதிரிகளையும் விரும்பவில்லை" என்றும், வெற்றிகரமான ஆப்கானிஸ்தானை உருவாக்க "நாங்கள் உலகத்துடன் இணைந்து செயல்படுவோம்" என்றும் கூறினார் .