தாலீபான்கள் கையில் சென்றால் நாடு என்ன ஆகும்? ஆப்கானிஸ்தானில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமை
ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தாலீபான்கள் அங்கிருக்கும் பெண்களுக்கு பாலியல்தொந்தரவு கொடுப்பது, திருமணத்திற்கு வற்புறுத்துவது என அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெற்று திரும்பிவிட்ட நிலையில், அங்கிருக்கும் தாலீபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.
இதனால் அரசு மற்றும் தாலீபன்களுக்கிடையே உள்நாட்டு போர் தீவிரமாகி வருகிறது. இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாலீபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில், தங்களிடம் சரணடையும் இராணுவ வீரர்களை, காவல்துறையினரை ஈவு இரக்கமின்றி கொலை செய்து வருகின்றனர்.
இதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர் குற்றமாக கூறுகின்றன. இந்நிலையில், தற்போது நகரின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி வரும் தாலீபான்கள் அங்கிருக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல், திருமணத்திற்கு நிர்பந்திப்பது போன்ற கொடூர செயலில் இறங்கியுள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அரசு, தாலீபான்களிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியாமல் தவித்து வருகிறது. தற்போது வரை ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.
அந்நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். "வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி விடுவார்கள்.
அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்அமெரிக்கா கூறியிருந்தது. அது போன்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாகாணம் என தாலீபான்கள் கைப்பற்றிக் கொண்டே செல்வதால் இது எங்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
இதற்கிடையில், கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரித்தானியா, உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் இரண்டாம் நாளான நேற்று, ஆப்கானிஸ்தான் சார்பில் மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக, தலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் தங்கள் கோரமுகத்தை காட்டி வருகின்றனர்.