கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட ஆப்கன் பெண் பொலிஸ் அதிகாரி உயிருக்கு பயந்து ஓட்டம்: வெளியாகும் தாலிபான்களின் சுயரூபம்
தாலிபான்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவே இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
முந்தைய அரசில் பணி புரிந்தவர்களை பழிவாங்கமாட்டோம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்றெல்லாம் கூறினார்கள் தாலிபான்கள். ஆனால், பெண்களின் நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது.
அப்படி முந்தைய அரசில் மூத்த பொலிஸ் அதிகாரியாக இருந்த ஒரு பெண், இப்போது உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.
34 வயதிருக்கும் என கருதப்படும் Gulafroz Ebtekar என்ற பெண், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தில் கிரிமினல் விசாரணைப்பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர். ஆப்கன் பெண்கள் அவரை ஒரு ரோல் மாடலாகவே வைத்திருந்தார்கள். பல ஊடகங்களில் பெண் உரிமை குறித்து பேட்டியளித்த Gulafroz, தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்தவர்.
ஆனால், தாலிபான்கள் அவரை தாங்கள் குறிவைத்துள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க, ஐந்து இரவுகளாக எப்படியாவது மீட்பு விமானம் ஒன்றில் தப்பிவிடவேண்டும் என்று எண்ணி காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்திருக்கிறார். ஆனால், யாரும் அவரை மீட்கமுன்வரவில்லை. பல நாடுகளின் தூதரகங்களுக்கு செய்தி அனுப்பினேன், எந்த பலனும் இல்லை என்கிறார் Gulafroz Ebtekar.
மீட்புக்குழுவினர் கைவிட்டதால் மீண்டும் வீடு திரும்பிய Gulafrozஇடம், அவர் இல்லாதபோது தாலிபான்கள் வந்து அவரைக் குறித்து விசாரித்ததாக அவரது தாய் கூற, உயிருக்கு ஆபத்து உருவாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு, பல்வேறு இடங்களில் சென்று மறைந்துகொண்டிருக்கிறார் அவர்.
மீண்டும் ஒரு முறை விமான நிலையம் செல்ல, அப்போது தாலிபான்கள் அவரை கற்களாலும் ஆயுதங்களாலும் கடுமையாக தாக்க, உயிருக்கு பயந்து, தலைமறைவாக ஓடிக்கொண்டே இருக்கிறார் Gulafroz.
பொலிஸ் அகாடமியில் முதுகலைப் பட்டப்படிப்புடன் பட்டம் பெற்ற முதல் ஆப்கன் பெண் Gulafroz என்பது குறிப்பிடத்தக்கது.