பழி வாங்கும் வெறியில் முன்னாள் கைதிகள்... அச்சுறுத்தலில் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகள்
நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளை தாலிபான்கள் விடுவித்துள்ள நிலையில், அவர்களால், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் நீதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றுவதற்கு முன்னரும் நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது நாடு முழுவதும் கைதிகள் தாலிபான் அமைப்பால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், சுமார் 250 பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் கூறி உள்ளார்.
காபூலில் தமது வீட்டிற்கு தாலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கைந்து பேர் சென்று விசாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் பெண் நீதிபதிகளிடம் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள், தங்களை மீட்காவிட்டால் உயிருக்கு நேரடி ஆபத்து இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர் என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கத்தில் உள்ள சக நீதிபதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் சமீபத்தில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர்.
மற்ற நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.