மேற்கத்திய படைகள் வெளியேறியதை பட்டாசு வெடித்து கொண்டாடிய தாலிபான்கள்: சுதந்திரம் அடைந்துவிட்டதாக அறிவிப்பு
ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப்பின் மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியதை பட்டாசு வெடித்தும் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டும் கொண்டாடியுள்ளார்கள் தாலிபான்கள்.
ஆகத்து 31 அன்று அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் என அமெரிக்க அதிபரும், வெளியேறியாகவேண்டும் என தாலிபான்களும் கூறிவந்த நிலையில், மேற்கத்திய நாட்டுப் படைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவே, அதாவது விதிக்கப்பட்ட கெடுவிற்கு 24 மணி நேரம் முன்னதாகவே, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன.
அவர்கள் வெளியேறி சில நிமிடங்களுக்குள் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் விமான தளத்துக்குள் சென்று, அமெரிக்க இராணுவம் விட்டுச் சென்ற ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்களை பார்வையிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
அத்துடன், அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாகவும், தாங்கள் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாகவும் பிரகடனம் செய்யும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
மேலும், தங்கள் வெற்றியை, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், வாண வேடிக்கை நிகழ்த்தியும் தாலிபான்கள் கொண்டாடுவதைக் காட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவுக்குச் சொந்தமான கடைசி விமானம் புறப்பட்டதும், ‘அமெரிக்க வீரர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள், நம் நாடு முழு சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அறிவித்துள்ளார் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளரான Zabihullah Mujahid என்பவர்.