இந்தியாவுக்கு எதிராக கடும்போக்கு வேண்டாம்... பாகிஸ்தானுக்கு முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராகவும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீப், தனது தம்பியும் தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைதியை மீட்டெடுக்க
இந்தியா விவகாரத்தில் கடும்போக்கு வேண்டாம் என்றும் இந்தியாவுடன் அமைதியை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக உறவுகளையும் பயன்படுத்தவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை லாகூரில் இரு சகோதரர்களும் சந்தித்துள்ளனர், தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கூட்டத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக அவரது அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் ஷெபாஸ் விளக்கியுள்ளார்.
குறிப்பாக பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இடைநிறுத்த இந்தியா எடுத்த முடிவை அடுத்து பாகிஸ்தானின் நகர்வுகள் தொடர்பில் ஷெபாஸ் ஷெரீப் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவின் நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும், இந்தியாவிற்கான அதன் வான்வெளியை மூடியது என்பதையும் ஷெபாஸ் ஷெரீப் விவரித்துள்ளார்.
ஆக்ரோஷமான நிலைப்பாட்டை
இந்தியாவின் எந்தவொரு முடிவுக்கும் அதிக பதிலடியுடன் பதிலளிக்க நாட்டின் தயார்நிலை குறித்தும் அவர் விளக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் ஒருதலைப்பட்ச முடிவு, இப்பகுதியில் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்று பிரதமர் ஷெஹ்பாஸ் தனது மூத்த சகோதரரும் கட்சி நிறுவனருமான நவாஸிடம் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் எந்தவிதமான ஆக்ரோஷமான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டாம் என்றும், பதட்டங்களைத் தணிக்க தூதரக வழிகளைப் பயன்படுத்துமாறும் பிரதமர் ஷெஹ்பாஸிடம் நவாஸ் ஷெரீப் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு சர்வதேச ஆணையத்தை இந்தியா அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |