அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்! தீவிரமடையும் வழக்கு விசாரணை
நில மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31 -ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் கைது
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
மேலும், இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அதன்படி, கரூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
ஏற்கனவே, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிய நிலையில் தான் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே சிபிசிஐடி பொலிஸார் 5 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரை தேட ஆரம்பித்தனர். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவானார் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு மாதமாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, விஜயபாஸ்கர் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கேரளாவுக்கு விரைந்த பொலிஸார் அங்கு நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த விஜயபாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
நீதிமன்ற காவல்
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31 -ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை, திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |