வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ட்ரோன் செயற்பாடுகள் காணப்படும் நிலையில், வான்வழித் தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாக போலந்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்
போலந்து வான்பரப்பை பாதுகாக்கும் பொருட்டு, போலந்து மற்றும் நேட்டோ போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு நகரமான லுப்ளினில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டது.
முன்னதாக போலந்தின் Chełm, Chełmski, Krasnostawski, Lęczyński, Swidnicki மற்றும் Włodawski மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வான்வழித் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மட்டுமின்றி, வழிமுறைகளைப் பின்பற்றவும். அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கவும் கேட்டுக்கொண்டனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை மணி ஒலித்ததாக தகவல் வெளியானது.
ரஷ்ய ட்ரோன்களால்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கியதன் பின்னர் போலந்தில் முதல் முறையாக எச்சரிக்கை மணி ஒலிக்க விடப்பட்டுள்ளது. போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தினார்.
போலந்து எல்லைக்கு அருகே உக்ரைன் மீது ஏவப்படும் ரஷ்ய ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, விமானப் போக்குவரத்து தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளதாக டஸ்க் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போலந்து வான்வெளியில் எந்த அத்துமீறலும் அதன் பின்னர் நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |