கத்தார் மீது மீண்டும் குறி வைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் காரணம் பணயக்கைதிகள் விடுதலையாவது தடைபடுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மீண்டும் கத்தார் மீது
கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை ஒழித்தால் மட்டுமே அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உள்ள முக்கிய தடை நீங்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, செவ்வாய்க்கிழமை கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் இஸ்லாமிய, அரபு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் தங்களின் ஒவ்வொரு முதன்மையான நகர்வையும் அமெரிக்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து வந்துள்ள இஸ்ரேல், சமீபத்திய கத்தார் மீதான தாக்குதல் முடிவை அமெரிக்காவிடம் இருந்து மறைத்ததாக கூறுகின்றனர்.
வீழ்த்தப்பட வேண்டும்
ஆனால், அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கை எதையும் முன்னெடுக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்களின் வாதமாக உள்ளது. மேலும் கத்தார் மீதான தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமரின் பேச்சு, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை முக்கிய முடிவெடுக்க தூண்டியுள்ளது.
காஸாவை திட்டமிட்டபடி கைப்பற்ற கத்தார் வீழ்த்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவே அந்த நாட்டின் சமீபத்திய நகர்வுகள் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர்களை ஒழிக்கும் நோக்கில் மீண்டும் கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |