அமெரிக்காவில் நடந்த கொடூர தாக்குதல்..நான்காவது நபராக 21 வயது இளம் பெண் சரண்
அமெரிக்காவின் அலபாமாவில் ஆற்றப்படகு குழுவின் இணை கேப்டன் தாக்கப்பட்ட சம்பவத்தில், 21 வயது இளம் பெண்ணொருவர் 4வது நபராக பொலிசாரிடம் சரணடைந்தார்.
இணை கேப்டன் மீது தாக்குதல்
கடந்த சனிக்கிழமை அன்று, அலபாமா மாண்ட்கோமெரியில் ஆற்றுப்படகு நிறுத்துமிடத்தில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது.
கறுப்பின இணை கேப்டன் டேமியன் பிக்கெட் (31) தனது படகை வழக்கமான நிறுத்த சிலரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் வெள்ளை இன நபர்கள் அவரை வசைபாடியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர்களின் படகை பிக்கெட் மூன்றடி மேலே நகர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர்கள் பிக்கெட்டை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி இனரீதியான தாக்குதல் என வைரலானது. இதனைத் தொடர்ந்து ரிச்சர்ட் வில்லியம் ராபர்ட்ஸ் (48), ஆலன் டோட் (23), சச்சேரி சேஸ் ஷிப்மேன் (25) ஆகிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இளம் பெண் சரண்
இந்த நிலையில் நான்காவதாக மேரி டோட் என்ற 21 வயது இளம்பெண், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி தாமாக முன் வந்து பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். மாண்ட்கோமெரி பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மாண்ட்கோமெரி நகர மேயர் ஸ்டீவன் ரீட் கூறும்போது, 'தனது வேலையை செய்து கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதற்காக பல பொறுப்பற்ற நபர்களை கைது செய்ய மாண்ட்கோமெரி காவல்துறை விரிவாக செயல்பட்டது' என தெரிவித்தார்.
அத்துடன் இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், இது ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |