போண்டி சம்பவத்தில் ஹீரோவான நபர் யார்? பிரதமர், ட்ரம்ப் உட்பட குவியும் பாராட்டு
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பறித்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
போராடி துப்பாக்கியை பறித்த ஹீரோ
போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடம் இருந்து சண்டையிட்டு துப்பாக்கியை பறித்தவர், 43 வயது அகமத் அல் அகமது என தெரிய வந்துள்ளது.
அவர் தாக்குதல்தாரியுடன் போராடி துப்பாக்கியை பறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, அந்தத் தாக்குதல்தாரி மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளிப் பிடிப்பது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.
அந்த சண்டையில் தன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் காயமடைந்த அகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அகமதுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
இந்த நிலையில், அகமதுவின் உறவினரான முஸ்தபா ஊடகத்திடம் கூறுகையில், "அவர் ஒரு ஹீரோ, நூறு சதவீதம் அவர் ஒரு ஹீரோதான். அவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. ஒன்று கையில், மற்றொன்று மணிக்கட்டில்; அவர் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன். நேற்று இரவு அவரைப் பார்த்தேன். அவர் நன்றாகத்தான் இருந்தார், ஆனால் மருத்துவர் என்ன சொல்கிறார் என்று நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் பாராட்டு
செய்தியாளர் சந்திப்பில், அகமதுவின் வீரத்தை நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ் பாராட்டினார். 
அவர், "அந்த மனிதர் (அகமது) ஒரு உண்மையான ஹீரோ. அவருடைய வீரத்தின் காரணமாக, இன்று இரவு பல பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை" என்றார்.
அதேபோல் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில், "மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஆபத்தை நோக்கி ஓடிய அவுஸ்திரேலியர்களை இன்று நாம் கண்டோம். இந்த அவுஸ்திரேலியர்கள் ஹீரோக்கள்; மேலும் அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பற்றியுள்ளது" என பாராட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) வெள்ளை மாளிகையில் தைரியமான மனிதர் என்று அகமதுவை பாராட்டியுள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |