இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களின்போது உயிரியல் பூங்கா ஒன்றில் நிகழ்ந்த ஒரு ஆச்சரிய நிகழ்வு!
சமீபத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடந்த மோதலைக் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்போம். அந்த மோதல்களின்போது, இஸ்ரேலிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நிகழ்ந்த ஒரு ஆச்சரிய சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியே இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நடந்துகொண்டிருக்க, துப்பாக்கி சுடும் சத்தமும், குண்டு வெடிக்கும் சத்தமும், சைரன் ஒலியும் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், உயிரியல் பூங்காவில் ஐந்து பெண் யானைகள் தங்கள் குட்டி ஒன்றை பாதுகாப்பதற்காக அதை சுற்றி சுற்றி வரும் அபூர்வ காட்சி ஒன்றை அந்த வீடியோவில் காணலாம்.
இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் யானைகள் இப்படித்தான் நடந்துகொள்ளுமாம். யானைகள் ஆபத்தை உணரும்போது, தங்கள் குட்டிகளை நடுவில் விட்டு, பெரிய யானைகள் அவற்றைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துமாம்.
அந்த வீடியோவில் அந்த ஒரு வயதுள்ள குட்டி யானையைச் சூழந்து நிற்கும் யானைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி நிற்பதைக் காணலாம்.
அதாவது எந்த திசையிலிருந்து ஆபத்து வந்தாலும் அதை எதிர்கொண்டு தங்கள் குட்டிகளை காக்க அவை தயாராக இருக்குமாம். ஒரு பெண் யானை பிரசவிக்கும்போதும், மற்ற பெண் யானைகள் அந்த யானையைச் சூழந்துகொண்டு அதற்கு பாதுகாப்பாக நிற்குமாம்.
அவற்றை மிருகங்கள் என்கிறோம், மனிதர்கள் மிருகங்கள் போல தங்கள் இனத்தையே தாக்கி ஒருவரையொருவர் அழிக்க நினைக்கும்போது, நாம் மிருகங்கள் என அழைக்கும் இந்த உயிர்கள் தங்கள் இனத்தை, தங்கள் வருங்கால சந்ததியைப் பாதுகாக்க மனிதர்களை விட சிறப்பாகவே செயல்படுகின்றன!