இந்திய மக்களவையில் எதிரொலித்த அம்பானி வீட்டு திருமணம்! கடும் வாக்குவாதத்தில் அரசியல் கட்சிகள்
அம்பானி வீட்டு திருமணத்தில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார் என்று மக்களவையில் பாஜக எம்பி பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.
இந்த திருமணத்தில் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் இந்திய பிரதமர் மோடி திருமணத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திரிக்கை வைத்த நிலையில் அவர்கள் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.
மக்களவையில் விவாதம்
இந்நிலையில், நேற்று நடந்த மக்களவை விவாதத்தின் போது பாஜக எம்.பி நிஷாந்த் துபே பேசுகையில், "அம்பானி வீட்டு விழாவில் யார் தான் கலந்துகொள்ளவில்லை.
அம்பானி வீட்டு திருமணத்தில் வைத்த இரவு விருந்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். ஆனாலும் அவரை காங்கிரஸ் கட்சி தாக்கி பேசுகிறது" என்றார்.
இவரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மறுப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், அம்பானி வீட்டு திருமண சமயத்தில் அவர் நாட்டிலேயே இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தில் அம்பானி மற்றும் அதானி புகைப்படங்களை காட்டி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |