உலகில் மிகவும் கண்டிப்பான நாடுகளில் ஒன்றில் அமெரிக்க தம்பதிக்கு கிடைத்த கடுமையான பாடம்
சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருட்களைத் திருடியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு அமெரிக்க பல் மருத்துவரும் அவரது பொறியாளர் மனைவியும் வாரக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொலிசாரால் கைது
கடந்த ஜூன் 23ம் திகதி சாங்கி விமான நிலையத்திலேயே இந்த தம்பதி கைவரிசையை காட்டியுள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 35 வயதான கபாடியா ஹுசைன் சோஹர், மற்றும் 30 வயதான கபாடியா அமத்துல்லா தம்பதி 750 டொலருக்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்களைத் திருடியுள்ளனர்.
பின்னர் மும்பை புறப்பட விமானத்தில் நுழைந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் பொருட்களைத் திருடுவது கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
தம்பதி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, பல் மருத்துவரான சோஹருக்கு 18 நாட்கள் சிறையும், அவரது மனைவிக்கு ஒரு வாரம் சிறையும் தண்டனையாக விதிக்கப்பட்டது.
குற்ற விகிதம்
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ல் சுமார் 5 மணியளவில் இவர்கள் இருவரும் திருட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹூஸ்டன் நகரில் மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவராக சோஹர் பணியாற்றி வருகிறார்.
கடுமையான சட்டங்களால் சிங்கப்பூர் உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. போதைப்பொருள் உட்கொள்வதில் பிடிபட்டவர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனையும், பிரம்பால் 24 அடிகளும் விதிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |