தலிபான் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்! 2 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை
தலிபான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க குடிமகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்
ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க விமானப் பொறியாளர் ஜார்ஜ் க்ளெஸ்மேன்(George Glezmann), 2022 டிசம்பரில் தலிபான்களால் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காபூலில் நடந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை, அவர் விமானம் மூலம் கத்தாரை பாதுகாப்பாக வந்தடைந்தார். அங்கிருந்து அமெரிக்காவுக்கு திரும்ப உள்ளார்.
தலிபான் உடனான அமெரிக்க பேச்சுவார்த்தை
ஜார்ஜ் க்ளெஸ்மேன் விடுதலை தொடர்பாக காபூலில் அமெரிக்க பணயக்கைதிகள் தூதர் ஆடம் போஹ்லர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை, தலிபான் வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே நடந்த மிக உயர்ந்த நேரடி பேச்சுவார்த்தை இதுவாகும்.
தலிபான் விளக்கம்
க்ளெஸ்மேன் விடுதலை "மனிதாபிமான அடிப்படையில்" மற்றும் "நல்லெண்ண சைகையாக" மேற்கொள்ளப்பட்டதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த ஒப்பந்தத்தை "நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை" என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளெஸ்மேனின் விடுதலையை உறுதி செய்த ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் கத்தார் முக்கிய பங்கு வகித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |