முக்கிய பண்டிகை நாள்... தேவாலயம் அருகே நடந்த கோர சம்பவம்: இரத்தவெள்ளத்தில் பலர்
இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் அருகே மர்ம நபர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த திடீர் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பலர் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் மக்காசர் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும், தாக்குதல்தாரி பக்தர்கள் நடுவே செல்ல முயன்ற நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபர் வெடிகுண்டை அங்கேயே வெடிக்க செய்துள்ளார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதுடன், 10கும் குறைவானவர்கள் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.
சிலரது நிலை மட்டும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. உடல் சிதறி பலியான தாக்குதல்தாரி எந்த அமைப்பை சார்ந்தவர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஐ.எஸ் ஆதரவு Jamaah Ansharut Daulah என்ற அமைப்பாக இருக்கலாம் என்றே பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 2018-ல் ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இந்த அமைப்பு முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 30 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசிய நாட்டில் கிறிஸ்தவர்கள் உட்பட பல மதத்தினர் சிறுபான்மையினராகவே கருதப்படுகின்றனர்.
கடந்த 2002ல் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாத அமைப்பு ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
