பிரான்சிலிருந்து அமைதியாக வெளியேறிக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்... அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சினை
பிரான்ஸ் நாட்டிலிருந்து இஸ்லாமியர்கள் அமைதியாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை...
நான் பிரான்ஸ் நாட்டவன், பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவரை திருமணம் செய்திருக்கிறேன், நான் பிரெஞ்சு மொழி பேசுகிறேன், பிரான்ஸ் நாட்டவராகவே வாழ்கிறேன், எனக்கு பிரெஞ்சு உணவும் கலாச்சாரமும் என்றால், அவ்வளவு பிடிக்கும், வெளிநாட்டில் என்னை பிரான்ஸ் நாட்டவர் என்று கூறுகிறார்கள். ஆனால், என் சொந்த நாடான பிரான்சில் நான் பிரான்ஸ் நாட்டவர் அல்ல என்கிறார் Amar Mekrous (46).
Amar, புலம்பெயர்ந்த தன் பெற்றோரால் பாரீஸ் புறநகர்ப்பகுதியில் வளர்க்கப்பட்டவர். 2015ஆம் ஆண்டு, இஸ்லாமியவாத தீவிரவாதிகள் பிரான்சில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டவர்களான இஸ்லாமியர்கள் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கப்பட்டதை உணர்ந்த Amar, இங்கிலாந்தில் சென்று குடியேறிவிட்டார்.
வரும் ஏப்ரலில் பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய மூன்று வேட்பாளர்களுமே, புலம்பெயர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தையே முக்கிய ஆயுதமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
பிரான்சுக்குள் புலம்பெயர்பவர்களைக் குறித்தே அவர்கள் தங்கள் பிரச்சாரங்களில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு முக்கிய விடயத்தைக் குறித்து அவர்கள் யாரும் பேசவில்லை. அது, பிரான்சிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் குறித்தது...
ஆம், இஸ்லாமியர்கள் என்பதால் தங்கள் மீது பாரபட்சம் அதிகரித்து வருவதால், ஏராளம் பிரெஞ்சு இஸ்லாமியர்கள் பிரான்சை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் என்றுகொண்டிருக்கிறார்கள்.
பல தொலைக்காட்சித் தொடர்களையும் நாவல்களையும் பிரெஞ்சு மொழியில் எழுதியவரான Sabri Louatah, தேர்தல் குறித்த விடயங்களை கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார், அமெரிக்காவில் வாழ்ந்தபடி...
காரணம், அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களின் பேரனான Sabri, 2015 தாக்குதல்களுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டவர்களுக்கு பிரெஞ்சு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்ததால், ஒருவர் Sabri மீது துப்பி, அழுக்கான அரேபியனே என்று திட்ட, பிலதெல்பியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
இவர்களைப் போலவே, இஸ்லாமியர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாலும், 2015 தாக்குதல்களுக்குப் பிறகு சந்தேகக் கண்களுடன் பார்க்கப்படுவதாலும், இஸ்லாமியர்கள் என்பதற்காகவே பொலிசாரால் தேவையில்லாமல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும், பிரான்சில் பிறந்தாலும், தாங்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் இல்லையோ என்பது போல உணரத் துவங்கிவிட்ட ஏராளம் இஸ்லாமியர்கள், அமைதியாக பிரான்சை விட்டு வெளியேறிக்கொண்டிருக்க, பிரான்ஸ் அரசியல்வாதிகளோ அதைக் குறித்து எதுவுமே பேசாமல், இன்னமும் இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பை ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்!