பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தடவி சித்ரவதை- பொலிசாரின் கொடூர செயல்
தமிழ் பழங்குடி குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை ஆந்திர காவல்துறையினர் விசாரணையின் பேரில் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும் 7 வயது சிறுவனும் அடங்குவர்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குல்பர்கா கிராமத்தில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரை ஆந்திராவிலுள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத்தலப்பட்டு காவல்நிலையத்தின் பொலிஸார் கைது செய்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
மூன்று வெவ்வேறு நாட்களில் கைது- நடந்தது என்ன?
ஜூன் 7, 11, 12 ஆகிய திகதிகளில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு இளம்பெண்ணும், ஆணும் விடுவிக்கப்படவில்லை.
அறிக்கைகளின்படி, ஜூன் 7-ஆம் திகதி குல்பர்கா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 6 பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பெண்னிடம் அய்யப்பன் என்ற நபர் எங்கிருக்கிறார் என்றும் திருடிய நகை எங்கு இருக்கிறது என்றும் கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
Source: பிபிசி தமிழ்-கைது குறித்து தகவல் தெரிந்ததும் குறவர் சங்கத்தினர் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்
பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தடவி சித்திரவதை
மறுநாள் அப்பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தடவிய இரும்புக்கம்பியை குத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
கொடுமைகளைத் தாங்க முடியாமல் கழிவறையில் கிடந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார். அப்போது மருத்துவரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு பிறகு மீண்டும் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
ஜூன் 11-ஆம் திகதி ஒரு குடும்பம்
இதையடுத்து, ஜூன் 11-ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் வாசலில் சாப்பிட உக்காந்திருந்த ஒரு பெண், அவரது கணவர், மாமியார் மற்றும் 7 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும், விசாரணை என கூறி, கண்களையும் கைகளையும் கருப்புத் துணியால் கட்டி, ஜீப்பில் வந்த ஒரு பெண் பொலிஸார் உட்பட 6 பொலிஸார் கைது செய்து அழுத்துச் சென்றுள்ளனர்.
ஜீப்பில் ஏற்றும்போது சாதியைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைப் பார்த்த அண்டை வீட்டுப் பெண் ஒருவர், மறுநாள் (12-ஆம் திகதி) காலையில் கணினி மையத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு புகார் தெரிவித்தார்.
12-ஆம் திகதி- புகார் செய்த பெண்ணின் குடும்பம் கைது
அன்று இரவே 8:30 மணியளவில் அப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அதேபோல் ஆந்திர பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
புகார் செய்த பெண்ணையும், அவரது கணவர் மற்றும் மருமகள் மூவரையும் சாதியைக் குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, முகத்தில் கருப்புத் துணி சுற்றி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஜீப்பில் செல்லும்போது அவரது மருமகளிடம் அவரது கணவர் எங்கிருக்கிறார் எனக் கேட்டு பொலிஸார் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
திருட்டு உட்பட சில வழக்குகள்
ஜூன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் 12-ஆம் திகதி கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதாகவும் அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இவ்வாறு வெவ்வேறு நாட்களை அழைத்துச் சென்ற பொலிஸார், அவர்களை மூன்று வெவ்வேறு இடங்களில் மாற்றிமாற்றி வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் இறுதியாக பிரச்சினை ஆன பிறகு விடுவிக்கும் நேரத்தில்தான் தங்களை சித்தூரில் உள்ள பூத்தலப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்ததாகவும் ஜூன் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் கூறுகிறார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்
நகை எங்கே என கேட்டு, கணவரை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு ஆந்திர பொலிஸார் அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் அவரது கணவர் அப்படியே சிறுநீர், மலம் அனைத்தையும் கழித்தபடி கயிற்றில் தொங்கவிடப்பட்டு சித்திரவதை செய்ததாகவும் அப்பெண் கூறினார்.
மேலும், "14ஆம் தேதியன்று இரவு தணிகாச்சலம் என்ற துணை ஆய்வாளர் என்னை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவு செய்தார். அதற்கு மறுத்தபோது, நான் ஒத்துழைக்கவில்லை என்றால் என் கணவரை அடித்தே கொன்றுவிடுவதாக மிரட்டி என்னை வன்கொடுமை செய்தார். பிறகு அங்கு நடந்ததை வெளியில் கூறினாலும் என் கணவரைக் கொன்று விடுவதாக அவர் மிரட்டினார். அதற்குப் பயந்து அந்தக் கொடுமையை நான் என் கணவரிடம்கூட சொல்லவில்லை," என்று அப்பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அடிக்கும்போது மட்டுமே ஒன்றாக வைத்திருந்ததாகவும் மற்ற நேரங்களில் பொலிஸார் தங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
8 பேர் விடுவிக்கப்பட்டனர்; இருவரின் நிலை மர்மம்
இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்பாக 19-ஆம் திகதி, 19 வயதான ராதா என்ற பெண் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். மேலும், தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நடத்திய போராட்டங்களின் விளைவாக, சித்தூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 10 பேரில் 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சித்தூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்ட 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விடுவிக்கப்படாத இருவரின் நிலை தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
PT-பாதிக்கப்பட்டவர்கள்
தமிழ்நாடு காவல்துறை உடந்தையா?
தமிழ் பழங்குடி குறவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், "குறவர் மக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையும் ஆந்திர காவல்துறையும் இந்தக் கொடுமைகளை அடிக்கடி செய்துகொண்டிருக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தும்கூட, இப்போது மீண்டும் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.
ஜூன் 11-ஆம் திகதியன்று ஒரு குடும்பத்தையே சித்தூர் பொலிஸார் பிடித்துச் செல்கின்றனர். அண்டை வீட்டார் அதுகுறித்துப் புகார் செய்தவுடன் எப்படி, அவர்களையும் சரியாக வீடு தேடி வந்து பிடித்துச் சென்றார்கள்? தமிழ்நாடு காவல்துறை உடந்தையாக இல்லாமல் இதைச் செய்திருக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்புகிறார்.
மேலும், "தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்க எடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகுதான் முழு விவரமும் தெரிய வரும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சராயு கூறியுள்ளார்.
Source: பிபிசி தமிழ்
Andhra Police, Kurava Community, Krishnagiri
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |