பிரித்தானிய பிரதமருக்கு துவங்கியது சிக்கல்... தேர்தலில் வெற்றி பெற்றார் போட்டியாளர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவிக்கு போட்டியாளராக உருவாகியுள்ள ஆன்டி பர்னாம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.
வெற்றி பெற்றார் ஆன்டி பர்னாம்
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து அகற்ற பலரும் பல விதங்களில் மறைமுகமாக செயல்பட்டுவரும் நிலையில், நேரடியாகவே அவருக்கு எதிராக களமிறங்கியவர்களில் முக்கியமானவர் ஆன்டி பர்னாம்.

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவரும் ஆன்டி பர்னாம், பிரதமர் போட்டியில் பங்கேற்பதற்காகவே, இங்கிலாந்திலுள்ள மேக்கர்ஃபீல்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டார்.
நேற்று நடைபெற்ற மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலில் ஆன்டி போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து யூகே ரீஃபார்ம் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யூகே ரீஃபார்ம் கட்சியின் வேட்பாளரை 9,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடையச் செய்து, 24,927 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார் ஆன்டி.
பிரித்தானிய பிரதமருக்கு துவங்கியது சிக்கல்...
ஆக, பிரதமருக்காக போட்டியில் பங்கேற்பதற்காகவே இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் ஆன்டி என்றால், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவிக்கு சிக்கல் துவங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.
அதை உறுதி செய்வதுபோல், ஆன்டியின் ஆதரவாளர்கள், ஸ்டார்மர், நாடு மற்றும் லேபர் கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்வார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், முறைப்படி தலைமைப் பதவிக்கான மாற்றம் நிகழ்வதற்கான நடவடிக்கைகளை ஸ்டார்மர் எடுக்கவேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, ஆன்டி பிரதமராகும் வகையில், ஸ்டார்மர் அமைதியாக பதவி விலகிவிடவேண்டும் என ஆன்டி அணியினர் விரும்புகிறார்கள்.
ஆனால், ஸ்டார்மர் அமைதியாக பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? தன்னைத் தேர்ந்தெடுத்தது மக்கள், மக்கள் கொடுத்த பொறுப்புகளை நிறைவேற்றி முடிப்பதற்காக எனது பதவிக்காலம் முடியும் வரை நான் பதவியில் இருப்பேன், பதவி விலகமாட்டேன் என்று கூறியிருந்தார் ஸ்டார்மர்.
ஆக, அடுத்து பிரித்தானிய அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரக்கூடும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |