பரவும் காட்டுத்தீயால் ஆத்திரம்: கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நபர்
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீக்கு காரணமானவர் எனக் கூறி, கும்பல் ஒன்று உயிருடன் ஒருவரை எரித்துக் கொன்றுள்ளது.
பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டவர், காட்டுத்தீயை அணைக்க உதவ வந்தவர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிக்கை ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, இதுவொரு ஏற்கமுடியாத கொடூரமான குற்றம் என அல்ஜீரியாவின் மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியவர்கள் எனக் கூறி மூவர் கைது செய்யப்பட்டு, காவல்துறை தலைமையகத்தில் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கும்பல் ஒன்று காவலர்களை தாக்கி, காட்டுத்தீக்கு காரணமானவர் எனக் கூறி ஒருவரை இழுத்து வெளியே கொண்டுவந்து, உயிருடன் தீ வைத்துள்ளனர்.
அந்த நபர் தீ காயங்களால் மரணமடைந்துள்ளார், குறித்த நபரை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட பொலிசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த தகவல் காட்டுத்தீயாக பரவ, சமுக ஊடக பக்கங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அல்ஜீரியாவில் பற்றியெரியும் காட்டுத்தீயால் இதுவரை 49 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்ஜீரியாவில் சுமார் 100 பகுதிகளில் தற்போது காட்டுத்தீ எரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது. அரசாங்கம் தரப்பில், இது திட்டமிட்ட சதிச் செயல் என்றே கூறப்படுகிறது.