அதிமுக - பாஜக மோதல்: தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என அண்ணாமலை பேச்சு
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனை இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என நான் எப்படி கூற முடியும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தன்மானம் பற்றி அண்ணாமலை
தமிழக மாவட்டம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவிதமான பிரச்சனை இல்லை. கட்சிகளின் அடிப்படையில் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன.
கூட்டணி கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். அதிமுக எதிர்க்கிறார்கள் என்றால் நான் இறங்க முடியாது. அதிமுகவில் உள்ள சிலருக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கலாம்.
நான் எந்த இடத்திலும் தவறாக பேசவில்லை. அதற்காக நான் எனது தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது. அது எனது அரசியல் ஆக்ரோஷமாக தான் இருக்கும்" என்றார்.
எடப்பாடியை முதல்வராக்குவோம் என எப்படி சொல்ல முடியும்?
மேலும் பேசிய அவர், "மத்தியில் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் எனவும், தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஆக்குவோம் எனவும் செல்லூர் ராஜு சொல்கிறார். அதை எப்படி நான் சொல்ல முடியும்.
மத்தியில் சொல்லலாம் சரி. தமிழகத்தில் எப்படி நான் சொல்ல முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனக் கூறிய நான் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என எப்படி சொல்ல முடியும்.
மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என்பதை யாரெல்லாம் ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்களுடன் தான் கூட்டணி. இதை அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |