மீண்டும் புகாரளித்த பள்ளி மாணவிகள்! தமிழகத்தை அதிரவைத்த சிவசங்கர் பாபா விவகாரத்தில் புதிய தகவல்
தமிழகத்தை உலுக்கிய சிவசங்கர் பாபா விவகாரத்தில் அவர் மீது சி.பி.சி.ஐ.டி. பொலிசார் மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்த பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதில் 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. பொலிசார் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.