இந்தியாவிற்காக விளையாட ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த சோகம் - ஹாங்காங்கிற்காக களமிறங்கும் அன்ஷுமன் ராத்
இந்திய அணியில் விளையாட ஆசைப்பட்ட வீரர், தனக்கு நேர்ந்த மோசமான சூழலால் மீண்டும் ஹாங்காங் அணியில் களமிறங்குகிறார்.
ஆசிய கிண்ணம் 2025
ஆசிய கிண்ணம் கிரிக்கெட் நாளை தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் T20 வடிவத்தில் நடைபெற உள்ளது.
நாளை அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகிறது.
இதுவரை 4 முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடியுள்ள ஹாங்காங் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த முறை, யாசிம் முர்தாசா தலைமையில் ஹாங்காங் அணி களமிறங்க உள்ளது.
அன்ஷுமன் ராத்
இந்த ஹாங்காங் அணியில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அன்ஷுமன் ராத் களமிறங்குகிறார்.
இந்தியாவின் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த அன்ஷுமன் ராத்தின் பெற்றோர், வணிகத்திற்காக 1990 ஆம் ஆண்டில் ஹாங்காங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்த அன்ஷுமன் ராத்திற்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஹாங்காங் அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை, 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 736 ஓட்டங்களும், 68 T20 போட்டிகளில் விளையாடி 1824 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில், பப்புவா நியூ கினியாவிற்கு எதிரான போட்டியில், 143 ஓட்டங்கள் குவித்தார் அன்ஷுமன் ராத். இதுவே ஒருநாள் போட்டியில், ஹாங்காங் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டமாகும்.
2018 ஆம் ஆண்டில் ஆசிய கிண்ணத்தில் விளையாடிய ஹாங்காங் அணியின் அணித்தலைவராக அன்ஷுமன் ராத் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் ஏற்பட்ட அவமானம்
2019 ஆம் ஆண்டில், தனது பூர்வீக நாடான இந்திய அணிக்கு விளையாடி ஆர்வம் காட்டிய அன்ஷுமன் ராத், ஹாங்காங் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2021 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரிசா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த அணியில் கடினமான சூழல்களை எதிர்கொண்டார்.
இது குறித்து பேசிய அவர், "அங்கு ஜூனியர் மற்றும் சீனியர் என்ற பாகுபாடு இருந்தது. என்னிடம் பேச யாரும் இல்லை. ஒருமுறை பருப்பு மற்றும் சாதத்தை கரண்டியால் சாப்பிட்டதற்காக கேலி செய்யப்பட்டேன்.
எனது தந்தையை செல்போனில் அழைத்து அழுது கொண்டே நான் ஏன் இங்கு இருக்கிறேன்? எனக்கு இது வேண்டாம். நான் 2 வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். ஆனால் இதற்கு மேல் வேண்டாம் என தெரிவித்தேன்.
2022 - 23 ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் போது, காயம் அடைந்தேன். அப்போது அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
நான் தொடர்ந்து விளையாடக்கூடாது என்பதற்காக எனது தோள்பட்டையில் நானே குத்திக்கொண்டு காயத்தை ஏற்படுத்தினேன். மீதமுள்ள போட்டிகளில் காயத்துடன் விளையாடினேன். அது ஒரு மோசமான தருணம்.
ஆறுதலுக்காக உணவை நாடினேன். இதன் காரணமாக எனது உடல் எடை 20 கிலோ கூடியது.
மீண்டும் ஹாங்காங்கில் வாய்ப்பு
இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் கிட்டத்தட்ட கையெழுத்தாகும் சூழல் இருந்தது. ஆனால் விசா காரணங்களால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு தகுதி பெறுவதற்காக, கேன்டர்பரி கிரிக்கெட் நிறுவனம் ராத்துக்கு 3 வருட வேலை-இருப்பிட விசாவை வழங்கியது. எனது படிப்பை இடைநிறுத்தி விட்டு, முயற்சித்தேன்.
என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. அதை வைத்து பிசிசிஐயிடம் முயற்சித்தேன். எல்லாவற்றையும் சரியாக செய்தும் வாய்ப்பு கிடைக்காது என்பது தாங்கி கொள்ள முடியாததாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் ஹாங்காங் திரும்பிய பின்னர், இனி ஒரு போதும் கிரிக்கெட் பேட்டை தொடக்கூடாது என்ற முடிவை எனது தந்தையிடம் கூறினேன்.
அப்போது என்னை சிறுவயதில் இருந்து அறிந்த ஹாங்காங் கிரிக்கெட் அணியின் உயர்செயல்திறன் மேலாளரான மார்க் ஃபார்மர், என்னிடம் பேசினார்.
உனக்கு என்ன வேண்டும் என்பதை எங்களிடம் சொல் எனக்கூறிவிட்டு, உனக்கு ஒப்பந்தம் வழங்குவதில் மகிழ்ச்சியாக உள்ளோம் என கூறினார்.
6 ஆண்டுகளில் எனக்கு அன்பும் நம்பிக்கையும் வழங்கப்பட்டதை முதல்முறையாக உணர்ந்தேன்.நான் கிட்டத்தட்ட அழுது விட்டேன்.
இப்போது நான் ஹாங்காங்கில் உள்ளேன். இப்போது சுதந்திர உணர்வை அனுபவிக்கிறேன். மைதானத்தில் அதிகம் சிரிக்கிறேன். விளையாடுவதற்கு நன்றியுடையடையவனாக இருக்கிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |