நெருப்பு கோபுரமான 20 மாடி கட்டிடம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்
இத்தாலியின் மிலன் நகரில் 20 மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு, அந்த கட்டிடம் முழுவதும் தீ படர்ந்ததால் மக்கள் அலறியயபடி வெளியேறியுள்ளனர்.
மிலன் நகரில் அமைந்துள்ள 20 மாடி கட்டிடத்திலேயே உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், அந்த கட்டிடத்தில் இருந்து பலரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஒரு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, சில நிமிடங்களில் மொத்த கட்டிடத்தையும் விழுங்கியதாக கூறப்படுகிறது. மொத்தமாக 70 குடும்பங்கள் அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கட்டிடத்தின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடி பயன்பாட்டுக்கு உதவாது என்றே தெரிய வந்துள்ளது. நெருப்பு கோபுரமான அந்த கட்டிடத்தில் எவரேனும் சிக்கியுள்ளார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலையடுத்து 15 வாகனங்களில் 50கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் திரண்டு போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே, குறித்த தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த மிலன் மேயர் பெப்பே சாலா, தற்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.