iCloud மற்றும் App Store உட்பட... ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு முடங்கிய ஆப்பிள் சேவை
Apple Services down For Thousands Of Users: ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ஆப்பிள் சேவைகள் முடங்கியுள்ளன.
Downdetector எனும் சேவை முடக்கத்தைக் கண்காணிக்கும் தளத்தின்படி, செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்காவில் ஆப் ஸ்டோர் (App Store), ஐகிளவுட் (iCloud) மற்றும் ஆப்பிள் பே (Apple Pay) உள்ளிட்ட பல ஆப்பிள் சேவைகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு
தங்கள் ஆப்பிள் சாதனங்களில் எதிர்பாராத விதமாக iCloud-லிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மீண்டும் உள்நுழைய முயன்றபோது சரிபார்ப்புச் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பயனர்களிடமிருந்து புகார்கள் வந்தபோதிலும், ஆப்பிளின் 'சிஸ்டம் ஸ்டேட்டஸ்' (System Status) பக்கம் சேவைகள் அனைத்தும் சீராகச் செயல்படுவதாகவே தொடர்ந்து காட்டியது. இந்தத் தடங்கல் குறித்து ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
நிதித் தகவல்களைத் திருடுவதையும் ஆப்பிள் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீங்கிழைக்கும் சைபர் தாக்குதலுக்கு, பிபிசி, ஹெச்எஸ்பிசி யுஏஇ வங்கி, ஏர் பிரான்ஸ் மற்றும் ஐகியா உள்ளிட்ட கிட்டத்தட்ட 200 முக்கிய இணையதளங்கள் இலக்காக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சமீபத்திய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், பயனர்களின் ஒன்லைன் அனுபவங்களைத் தனிப்பயனாக்க முக்கிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளமான Optimizely வழங்கும் கருவிகளில், ஹேக்கர்களால் சிதைக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் குறியீடு புகுத்தப்பட்டுள்ளது.
ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டத் தளங்களின் பட்டியலில் உலகில் அதிகம் பார்வையிடப்படும் சில தளங்கள் இடம்பெற்றுள்ளன: Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (UAE), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock.
தொழில்நுட்பக் கோளாறு
ஒரு நாள் முன்னதாக, சில முக்கிய அமெரிக்க வங்கிகளின் ஒன்லைன் கணக்குகளை அணுகுவதில் சிரமம் இருப்பதாகப் பல வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். பேங்க் ஆஃப் அமெரிக்கா, சேஸ், யுஎஸ் பேங்க், வெல்ஸ் ஃபார்கோ மற்றும் ட்ரூயிஸ்ட் ஆகிய வங்கிகள் செயலிழந்துள்ளதாக அல்லது சிக்கல்களை எதிர்கொள்வதாகப் பயனர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

இதனையடுத்து சேஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில பரிவர்த்தனைகள் நிறைவடைவதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன, ஆனால் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளையும் நிதிகளையும் தொடர்ந்து அணுக முடியும். இதை முடிந்தவரை விரைவாகச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.