FIFA உலகக் கோப்பை: கத்தாரில் இந்திய கொடியை அணிந்துகொண்ட அர்ஜென்டினா பெண்! வைரல் வீடியோ
கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக் கோப்பையில் இந்தியக் கொடியை அணிந்த அர்ஜென்டினா பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறார்.
FIFA உலகக் கோப்பை 2022 கத்தாரில் நடந்து வருகிறது, இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் முழுமையாக கொண்டாடி வருகின்றனர். இந்த விளையாட்டு மற்றும் அதன் வீரர்களின் மீதான ஆர்வமும் காதலும் எல்லையற்றதாக தோன்றுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில், உலகக் கோப்பையை நேரலையில் காண உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்கள் கத்தாருக்குச் சென்றுள்ளனர்.
இந்திய ரசிகர்கள்
கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் நாடான இந்தியா, கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களையும் கொண்டுள்ளது. இந்த ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று இந்த போட்டியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பல செய்திகள் காட்டுகின்றன.
பல கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ரசிகர்கள் பல பகுதிகளில் பிரமாண்டமான கட்-அவுட்களை வைத்துள்ளனர்.
கேரளாவில் ஒரு ரசிகர் குழு, உலகக் கோப்பை போட்டிகளைக் காண்பதற்காகவே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளது, மேலும் கேரளாவில் இருந்து பெண் ஒருவர் தனது காரில் கத்தார் வரை சென்று போட்டிகளை கொண்டாடுகிறார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த இளம்பெண்
இது போன்ற ஏராளமான ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு மத்தியில், இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த லெட்டி எஸ்டீவ்ஸ் (Leti Estevez) என்ற பெண், கத்தாரில் இந்தியக் கொடியை தன மீது அணிந்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றது.
கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகரான யாதில் எம் இக்பால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் அந்தப் பெண்ணுடன் உரையாடுவதையும் இந்தியாவின் கோடியை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்பதையும் காணலாம்.
அர்ஜென்டினாவையும் அதன் கால்பந்தையும், குறிப்பாக லியோனல் மெஸ்ஸியை இந்தியர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை யதில் லெட்டியிடம் கூறுவதுடன் அந்த வீடியோ தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து லெட்டி எஸ்டீவ்ஸ், தான் ஏன் இந்தியக் கொடியை அணிந்திருந்தேன் என்பதை வெளிப்படுத்தினார். இந்திய ரசிகர்கள் தனது அணி மீது காட்டிய அன்பைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அதனால்தான் அவர் மூவர்ணத்தை அணிந்ததாகவும் கூறினார்.
அர்ஜென்டினா
இதற்கிடையில், அர்ஜென்டினா தனது இரண்டாவது குரூப் ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் இன்னும் போட்டியில் உயிர்ப்புடன் உள்ளது.
முன்னதாக, குரூப் தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என தோல்வியடைந்தது.
அர்ஜென்டினா தனது கடைசி குழு ஆட்டத்தில் போலந்துக்கு எதிராக டிசம்பர் 1 வியாழன் அன்று விளையாடுகிறது