இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை கைது செய்ய உள்ள அரசு - பின்னணி என்ன?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுனா ரணதுங்காவை கைது செய்ய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அர்ஜுனா ரணதுங்கா
1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர் அர்ஜுனா ரணதுங்கா.

2001 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அரசியலில் நுழைந்து பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பை கவனித்து வந்தார்.
2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பெட்ரோலிய வள மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்த காலகட்டத்தில், நீண்ட கால எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியமைத்து, அதிக விலைக்கு உடனடி கொள்முதல் செய்ததாக ரணதுங்கா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
27 கொள்முதல்களிலிருந்து அரசுக்கு 800 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்ததும் கைது?
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட அர்ஜுனா ரணதுங்காவின் மூத்த சகோதரரும் அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்பொரேஷனின் அப்போதைய தலைவருமான தம்மிக ரணதுங்க கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜுன ரணதுங்க தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரைக் கைது செய்ய முடியாது எனவும், அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் எனவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரணதுங்கவின் மற்றொரு சகோதரரும், முன்னாள் சுற்றுலா அமைச்சரான பிரசன்ன ரணதுங்கா, காப்பீட்டு மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |