சூடானில் துணை ராணுவப் படை விடுத்த அழைப்பு: அமெரிக்கா எடுத்த முயற்சி
சூடானில் 24 மணி நேரம் மோதலை நிறுத்த துணை ராணுவப் படை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோதலை நிறுத்த அழைப்பு
குறித்த கோரிக்கையை சூடான் ராணுவம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் ஆட்சியை கைப்பற்ற துணை ராணுவப் படைகளில் ஒன்றான பலம் பொருந்திய ஆர்எஸ்எஃப் படைகளும் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
@getty
இந்த மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகத்தின் தலையீட்டின் காரணமாக போராடும் ஆர்எஸ்எஃப் படைகள் 24 மணி நேரம் மோதலை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் வகையிலும் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் செய்ய ஏதுவாகவும் 24 மணி நேரம் அமைதியைக் கடைப்பிடிக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம் என ஆர்எஸ்எஃப் குழுவின் தலைவர் ஜெனரல் டகலோ தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மோதல் நிறுத்தத்திற்கு சூடான் ராணுவம் மறுத்துள்ளதாகவே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறி ராணுவம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கூட குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.
ஆண்டனி பிளின்கனுடன் பேச்சுவார்த்தை
நாங்கள் தொடர்ந்து அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஆண்டனி பிளின்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இப்படியான ஒரு அமைதி ஒப்பந்தம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், சர்வதேச சமூகம் இதில் மத்தியஸ்தம் செய்வதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் சூடான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
@twitter
இதனிடையே, அமெரிக்க தூதரக வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் ஆண்டனி ப்ளின்கன் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவத் தளபதியையும் அந்நாட்டு துணை ராணுவப் படைத் தளபதியையும் தொடர்பு கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே பொதுமக்கள் குறிப்பாக வெளிநாட்டு தூதர்கள், பணியாளர்கள் வெளியேற ஏதுவாக அமைதி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிகிறது.