பாகிஸ்தானின் புதிய இராணுவ தலைமை அதிகாரி இந்தியாவிற்கு மிரட்டல்
பாகிஸ்தானின் இராணுவத் தலைமை அதிகாரியாக (Chief of Defence Staff) பதவியேற்றுள்ள அசிம் முனீர் (Asim Munir) தனது முதல் உரையில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முனீர், “அடுத்த முறை இந்தியா எந்தவொரு தாக்குதலையும் மேற்கொண்டால், பாகிஸ்தானின் பதில் இன்னும் வேகமாகவும் கடுமையாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முனீர் தனது உரையில், பாகிஸ்தான் “அமைதியை விரும்பும் நாடு” என்று கூறினாலும், அவரது பேச்சு முழுவதும் போர்முனைப்பு மற்றும் மிரட்டல்களால் நிரம்பியிருந்தது.
இந்தியா “தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலைக்கு செல்லவேண்டாம்” என்றும், பாகிஸ்தானின் அடையாளம் “வெல்ல முடியாதது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் இறையாண்மையை யாரும் சவால் செய்ய முடியாது எனவும், நம்பிக்கையும் ஒற்றுமையும் கொண்ட வீரர்களால் நாடு பாதுகாக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்திய எல்லை மோதல்களை முன்னிட்டு, பாகிஸ்தான் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உரை, பாகிஸ்தான் புதிய இராணுவத் தலைமை அதிகாரி தனது பதவியேற்பின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
பிராந்திய அமைதி, பேச்சுவார்த்தை மற்றும், ஒத்துழைப்பை வலியுறுத்தாமல், மிரட்டல்களுடன் எதிர்ப்பை முன்னிறுத்தியுள்ளதால், தெற்காசியாவில் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |