தடுப்பூசி அல்லது வேலையை விட்டுவிடுங்கள்... அரசு ஊழியர்களை கட்டாயப்படுத்தும் நாடு
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ராஜிநாமா செய்யுங்கள் என்று அரசு ஊழியர்களுக்கு ஜிம்பாப்வே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன். இதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று ஜிம்பாப்வே அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும் தகுதியுடைய 12 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் சீனாவிடம் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய பணத்தை செலுத்திவிட்டதாக ஜனாதிபதி எமர்சன் மாங்க்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தடுப்பூசித் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தும் வகையில் ஜிம்பாப்வே அரசு கெடுபிடி காட்டத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஜிம்பாவே அரசு, மக்கள் தடுப்பூசியைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.
ஆனால், அரசுப் பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதியாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஜிம்பாப்வேவில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்.
அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்த்தால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப தேவையில்லை என்று உத்தரவிட நேரிடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் இதுவரை 125,671 பேருக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,439 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி அளிக்கும் பணியை ஜிம்பாப்வே முடுக்கிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது.