கணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் பதுக்கிய பெண்: காதலனின் உதவியுடன் செய்த சதி திட்டம்
அசாமில் வந்தனா கலிதா என்ற பெண், கணவன் மற்றும் மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மற்றும் மாமியார் கொலை
அஸ்ஸாமின் நூன்மதியில் வசிக்கும் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று, அவர்களின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேயின் உடல்களை துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன்பு வந்தனா அவர்களை கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் மூன்று நாட்கள் வரை அடைத்து வைத்து இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் வந்தனா கலிதாவுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாகவும், வந்தனா கலிதா அவரது காதலருடன் இணைந்து உடல் உறுப்புகளை குவஹாத்தியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று மறைவான இடத்தில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர் கொலைகள்
கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வால்கரை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலா கொன்று குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்து இருந்த சம்பவத்துக்கு இணையாக இந்த அசாம் நிகழ்வு பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் நிக்கி யாதவ் என்ற மற்றொரு பெண், அவரது கூட்டாளியான சாஹில் கெலாட்டால் கொல்லப்பட்டார் மற்றும் அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.