புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்திய பிரதமர் ஒருவருக்கு கடும் பின்னடைவு: நீதிமன்றம் அதிரடி
புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலி அரசாங்கத்திற்கும் அல்பேனியாவுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தமானது தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இத்தாலி நாடுகடத்தியவர்களில்
தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமுக்கு இத்தாலி அரசாங்கம் நாடுகடத்தியவர்களில் எஞ்சிய 12 பேர்களும் மீண்டும் இத்தாலிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி முடிவானது இத்தாலியின் தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, இந்த முடிவானது வியாழன் அன்று விவாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களின் சாத்தியம் மற்றும் சட்டப்பூர்வத்தன்மை குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவுக்கு வெளியே மூன்றாவது நாட்டில் முகாம் அமைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அல்பேனியாவில் அமைந்துள்ள இத்தாலிய அரசாங்கத்தின் அகதிகள் முகாமில் முதற்கட்டமாக 16 பேர்கள் அனுப்பி வைக்கப்பட்டதில், நால்வர் உடனையே இத்தாலி திரும்பினர். தற்போது நீதிமன்ற தலையீட்டில் எஞ்சிய 12 பேர்களும் நாடு திரும்ப உள்ளனர்.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த முடிவை பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் கட்சியான Brothers of Italy தங்களது சமூக ஊடக பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
ஐரோப்பாவின் சட்டமாக மாறும்
நீதிபதிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகவும், இத்தாலியின் எல்லைகளை ஒழித்துக் கட்ட நடத்தும் மறைமுக திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் கொந்தளித்துள்ளது.
இதனிடையே, உள்விவகார அமைச்சர் Matteo Piantedosi தெரிவிக்கையில், நீதிமன்ற முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றார். புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் இத்தாலியின் இந்த முடிவு மிக விரைவில் ஐரோப்பாவின் சட்டமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலிய அரசாங்கமானது புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்கள் விடுத்து மாதம் 3,000 ஆண்களை அல்பேபியாவில் உள்ள முகாம்களுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது.
இதில் முதற்கட்டமாக 16 பேர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தாலிய அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 22 நாட்டவர்களை மட்டுமே அல்பேனியாவுக்கு நாடுகடத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |