நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் இவர் தான்! பெயர் மற்றும் புகைப்படம் வெளியானது
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் புகைப்படம் மற்றும் அவரின் விபரம் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் LynnMall-ல் இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். இதில் மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்திய 32 வயது இலங்கையரை பொலிசார் சம்பவ இடத்திலே சுட்டுக் கொன்றனர். ஆனால் அவர் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகமல், அவர் இலங்கையர், கடந்த 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு வந்தவர் என்று அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தாக்குதல் நடத்திய இலங்கையரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்பது தெரியவந்துள்ளது, அதுமட்டுமின்றி அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
Pic: STUFF.CO.NZ
கடந்த ஜூலை 2018-ஆம் ஆண்டு நியூசிலாந்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட Samsudeen பெயர் உட்பட விவரங்களை வெளியிட உயர்நீதிமன்ற நீதிபதி Wylie தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஏனெனில், அந்த காலகட்டத்தில், Samsudeen அகதி அந்தஸ்து பரிசீலனையில் இருந்ததுள்ளது மற்றும் அதில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அவரது விவரங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டது.
உத்தரவு பிறப்பித்த நேரத்தில், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததாக நீதிபதி Wylie கூறினார்.
அதேசமயம், Samsudeen தனது அகதி அந்தஸ்தை ரத்து செய்யும் நோட்டீஸின் மேல்முறையீட்டை முடிக்காமல் இருந்துள்ளார்.
ஆனால், ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட் தாக்குதலை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு, சம்சுதீனின் பெயர் உட்பட விவரங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசாங்கம் தரப்பில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு Samsudeen விவரங்களை வெளியிட விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் Samsudeen குடும்பத்தை தொடர்பு கொண்டு விவரங்கைள வெளியிட புதிய தடை உத்தரவுகளைப் பெற விரும்புகிறார்களா என்பதை உறுதி செய்ய அவரது வழக்கறிஞர்களுக்கு, நீதிபதி Wylie மேலும் 24 மணிநேரம் காலஅவகாசம் வழங்கினார்.
காலஅவகாசம் முடிந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் இரண்டாவது விசாரணைக்குப் பிறகு, சம்சுதீனின் குடியேற்ற நிலை மற்றும் அகதி அந்தஸ்துக்கான உரிமைகோரலுக்கான காரணங்கள் பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்தலாம் என்று நீதிபதி Wylie தீர்ப்பளித்தார்.
பொதுவாக அகதி அந்தஸ்தைக் கோருபவர்கள் விவரங்கள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படலாம் அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சட்டப்படி, அகதி அந்தஸ்தைக் கோருபவர்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.