கடைசிவரை போராடிய ஷதாப் கான்: பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரீன், இங்லிஸ் அரைசதம்
லாகூரில் கடாஃபில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 53 ஓட்டங்களும், ஜோஷ் இங்லிஸ் 51 ஓட்டங்களும், மேட் ரென்ஷா 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணித்தலைவர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ராஃப், அராஃபத் மின்ஹாஸ் மற்றும் அப்ரர் அகமது தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் மாஸ் சதாகத் டக்அவுட் ஆக, சாஹிப்ஸதா ஃபர்ஹான் 3 ஓட்டங்களில் வெளியேறினார்.

பாபர் அஸாம் 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சல்மான் அஹா (7), அப்துல் சமாத் (2) ஆகியோர் சொதப்பினர்.
அதனைத் தொடர்ந்து, காஸி கோரி 48 பந்துகளில் 37 ஓட்டங்களில் ஆடம் ஜம்பா பந்துவீச்சில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 78 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறியது.
போராடிய ஷதாப் கான்
அதன் பின்னர் ஷதாப் கான், அராஃபத் மின்ஹாஸ் கூட்டணி அணியை மீட்க போராடியது. மின்ஹாஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, ஷதாப் கான் அரைசதம் அடித்தார்.
எனினும் மேத்யூ ஷார்ட், எல்லிஸின் மிரட்டலான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி 190 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டாக அவுட் ஆன ஷதாப் கான் (Shadab Khan), 104 பந்துகளில் 71 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) எடுத்தார்.
நேதன் எல்லிஸ் (Nathan Ellis) 4 விக்கெட்டுகளும், மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளும், கூனமென், ஜம்பா மற்றும் சங்கா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |