அடுத்தடுத்து குவியும் பொருளாதார தடைகள்: பின்வாங்குமா ரஷ்யா?
உக்ரைன் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஜப்பான் என அடுத்தடுத்து பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனேட்ஸ்க் ஆகியவற்றை சுதந்திர நாடாக அறிவித்து, அப்பகுதிக்குள் தனது ராணுவத்தையும் ரஷ்யா நிலை நிறுத்தியுள்ளது.
இதற்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இது உக்ரைனின் இறையாண்மைக்கும், உலக நாடுகளின் சட்டத்திற்கும், ரஷ்யாவின் செயல் எதிராக இருப்பதாக கூறி அவற்றின் மீது சில பொருளாதார தடைகளை விதித்தன.
இந்த வரிசையில் தற்போது, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இணைந்து ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா விதித்துள்ள பொருளாதார தடையில், ரஷ்யா அறிவித்துள்ள சுதந்திர பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனேட்ஸ்க் ஆகியவற்றுடன் வணிக மற்றும் பொருளாதார தடையை வித்துள்ளது மற்றும் ரஷ்யாவின் இந்த படையெடுப்பால் பயனடைய விரும்பும் ரஷ்யா மக்கள் மீதும் சில பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு எதிராக பயண தடையும், மற்றும் நிதித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவுஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைப்போலவே கனடாவும், ஜப்பானும் ரஷ்யா மீதும், ரஷ்யா சுதந்திர நாடாக அறிவித்த இரு பகுதிகள் மீதும் வணிக மற்றும் பொருளாதார தடைகளை விதித்ததுடன், குறிப்பிட்ட ரஷ்யர்களின் வங்கி கணக்குகளையும் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் எரிசக்தி சந்தையில் விலைஉயர்வு ஏற்பட்டால், அதனை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஜப்பான் இறங்க தயாராகி வருவதாக ஜப்பான் பிரதமர் பியூமிவ் கிஷிடா தெரிவித்துள்ளார்.