அவுஸ்திரேலியாவில் முதல் H5 வகை பறவை வைரஸ் காய்ச்சல் உறுதி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
அவுஸ்திரேலியாவில் முதல் H5 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் H5 வகை பறவை காய்ச்சல் உறுதி
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கேப் லெ கிராண்ட் தேசிய பூங்காவின் கடற்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து செல்லும்(migratory) பிரவுன் ஸ்குவா(Brown Skua) என்ற பறவையிடம் H5 வகை பறவை காய்ச்சலுக்கான வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் வைரஸ் தொற்று பரவலை நாட்டின் தேசிய அறிவியல் நிறுவனம் இந்த முடிவை உறுதி செய்து இருப்பதாக அந்நாட்டின் வேளாண் அமைச்சர் ஜூலி காலின்ஸ் கான்பெராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவுஸ்திரேலியாவில் தற்போது வரை வைரஸ் தொற்று காரணமாக பறவைகள் உயிரிழந்ததற்கான ஆதாரங்களோ அல்லது வளர்ப்பு பறவைகளிடம் வைரஸ் தொற்று அறிகுறிகளோ இல்லை என்ற அமைச்சர் ஜூலி காலின்ஸ் உறுதியளித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாட்டில் முதல் H5 வகை பறவை காய்ச்சலுக்கான வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பது கவலையளிக்கும் விஷயம் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசு கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கடற்கரை பறவைகளுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொள்ளுதல், கோழிப்பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குதல், வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரினங்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுதல் ஆகியவை மேற்கொள்ள தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |