என்னை சந்திக்க வருவதை தவிருங்கள்- உதயநிதி
என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், நேற்று அவர் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி பதிவு
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள்.
உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன். எனினும், முதலமைச்சரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். எ
ன்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |