நன்றியுணர்வு வேண்டும் என்ற அமைச்சர்... பிரித்தானியாவை ஆதரித்ததால் பதவியை இழக்கும் உக்ரைன் தூதர்
பிரித்தானியா ஒன்றும் அமேசான் நிறுவனமல்ல, கேட்டதும் ஆயுதம் வழங்க, நன்றியுணர்வு வேண்டும் என்ற பிரித்தானியா அமைச்சரின் பேச்சை ஆத்தரித்த உக்ரைன் தூதருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தூதர் வாதிம் பிரிஸ்டைகோ
கடந்த வாரம் நேட்டோ மாநாட்டில் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கிண்டலடித்ததை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார் பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் வாதிம் பிரிஸ்டைகோ.
@getty
உக்ரைன் நன்றியுணர்வு காட்ட வேண்டும் எனவும் தமது நட்பு நாடுகளை வெறும் ஆயுதம் வழங்கும் அமேசான் நிறுவனமாக கருதக் கூடாது எனவும் அமைச்சர் பென் வாலஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இனி உக்ரைன் மக்கள் காலையில் கண் விழித்ததும் பிரித்தானிய அமைச்சருக்கு நன்றி சொல்வார்கள் என கிண்டலாக பேசியிருந்தார்.
@alamy
உறவை இந்த விவகாரம் பாதிக்கும்
அத்துடன், எந்த வகையில் உக்ரைன் மக்கள் நன்றி கூற வேண்டும் என்பதை அமைச்சர் தமக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கட்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான், பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் வாதிம் பிரிஸ்டைகோ தெரிவிக்கையில், இது ஆரோக்கியமான பதிலாக கருத முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை இந்த விவகாரம் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்தே, வாதிம் பிரிஸ்டைகோ தூதர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, திருப்பி அழைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
@pa
ஆனால் இதுவரை அது தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் ஜெலென்ஸ்கி மீது வைக்கப்படும் விமர்சனங்களை உக்ரைன் ஒருபோதும் ஏற்காது என்றே பிரித்தானியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |