வினேஷ்க்கு வாழ்த்து கூற பிரதமர் மோடிக்கு இப்போது துணிவு வருமா? மல்யுத்த வீரர்
பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தை, பிரதமர் மோடி எப்படி வாழ்த்துவார் என பார்க்க ஆவலாக இருப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நிலையில், மல்யுத்த பிரிவில் வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை எதிர்கொண்டார் வினேஷ் போகத் (Vinesh Phogat).
பரபரப்பான போட்டியில் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானாவை வீழ்த்தினார். அரையிறுதியில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார்.
பஜ்ரங் புனியா
இந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றது குறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறுகையில், "பிரதமர் மோடி வினேஷ் போகத்திற்கு போன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் மீண்டும் இந்தியாவின் மகள் ஆகிவிடுவார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு போன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தினர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டுகொள்ளாததை குறிப்பிட்டு பஜ்ரங் புனியா இவ்வாறு பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |