ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் உற்பத்தி நாடாக மாறிய வங்காளதேசம்
Bangladesh Gets Nuclear Power From Russian Plant: வங்காளதேசம் தனது வரலாற்றில் முதன்முறையாக அணுமின் உற்பத்தி செய்து தேசிய மின்வலையில் இணைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம்
இதன் மூலம் தெற்காசியாவின் இளம் நாடுகளில் ஒன்றான வங்கதேசம், அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.

தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகு தேசிய மின்வலையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற திட்டமிடல், பில்லியன் டொலர் முதலீடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் பலனாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணு உலையில் முதன்முறையாக தொடர்ச்சியான அணுச்சங்கிலி வினை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தேசிய மின்வலையில் இணைக்கப்பட்டுள்ளது. ரூப்பூர் அணுமின் நிலையத்தில் ரஷ்யாவின் VVER-1200 வகையைச் சேர்ந்த இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உலையும் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இரண்டு அலகுகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு மொத்தமாக 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த திட்டம் ரஷ்யாவின் அரசுடைமை அணுசக்தி நிறுவனமான ரோசாடம் (Rosatom) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 12.65 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், வங்கதேச வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அணுமின் நிலையத்தின் முதலாவது அலகு தற்போது கட்டம் கட்டமாக தனது உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது. தேசிய மின்வலையுடன் இணைக்கப்பட்ட நேரத்தில் சுமார் 370 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றல் தேவைக்காக இறக்குமதி எரிபொருட்களை அதிகம் நம்பி வரும் வங்காளதேசத்திற்கு, இந்த அணுமின் திட்டம் நீண்டகால ஆற்றல் பாதுகாப்பை வழங்கும் முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்த கார்பன் வெளியீட்டுடன் நிலையான மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் ஆதாரமாக அமையும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் வழங்க திட்டம் - உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |